* விரைவில் வருகிறது டிஜிட்டல் பில்லிங், எம்ஆர்பி விலையே வசூல், சென்னையில் சோதனை ஓட்டம்
சென்னை: தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.121 கோடியும், மாதம் ரூ.3,698 கோடியும் மது விற்பனை நடக்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் குடிமகன்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் வகையில், கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும், கூடுதல் விலைக்கு மது விற்கும் ஊழியர்கள் கண்டறியப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ஆன்லைன் பரிவர்த்தனை முறை மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து நேரடியாக பெறப்படும் ரொக்கப்பணம் மூலமாக அதிகமாக முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணமாக இருந்தன.
இதனால், மது விற்பனையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், தவறான நடைமுறைகளை கட்டுப்படுத்தவும், டாஸ்மாக்கில் யூபிஐ கட்டணங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பயன்படும் பார்கோடு அடிப்படையிலான விலை குறிச்சீட்டுகளை ஒருங்கிணைக்கும் புதிய டிஜிட்டல் பில்லிங் முறையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையில், மதுபாட்டிலின் பார்கோடு ஸ்கேன் செய்யப்பட்டவுடன், அதன் அதிகபட்ச சில்லரை விலை (எம்.ஆர்.பி) தானாகவே பாயிண்ட் ஆப் சேல் என்று அழைப்படும் பிஓஎஸ் மெஷினில் தோன்றும். இதனால் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டண வசூலிப்பதை இந்த நடைமுறையால் முற்றிலும் தடுக்கப்படும்.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் பிஓஎஸ் மூலம் பணம் அளிக்கும் முறை நடைமுறையில் இருந்தாலும், பணியாளர்கள் எம்.ஆர்.பி-ஐ அந்த மெஷினில் கையால் பொத்தானை அழுத்தி வாங்கி மதுபானத்திற்கான தொகையை உள்ளிடுவர்.
இப்போது புதிய மெஷின்கள் பார்கோடு ஸ்கேன் மூலம் எம்.ஆர்.பி-ஐ தானாகப் பதிவாகி பாட்டிலில் என்ன விலை உள்ளதோ அந்த விலையை மட்டும் செலுத்தினால் போதும். இதற்காக நான்கு தனியார் வங்கிகளுடன் இணைந்து புதிய பிஓஎஸ் சாதனங்களை வாங்கியுள்ளோம். இது தவறான நடைமுறைகளை குறைத்து, கண்காணிப்பை மேம்படுத்தும்.
பணமாக கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பு தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மாக் பணியாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் புதிய அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளோம்.
எல்லா பணியாளர்களும் பணம், யுபிஐ மற்றும் கார்டு கட்டணங்களுக்கான தனித்தனி பதிவுகளை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது எளிதாகும். மாவட்ட மேலாளர்கள் தினசரி கணக்குகளை சரிபார்த்து, பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கட்டணங்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* 100% ஆன்லைன் பரிவர்த்தனை இலக்கு
டாஸ்மாக் கடைகளில் ரொக்கப்பணம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, க்யூஆர் கோடு போன்றவை மூலமாக மது வாங்குவோரிடம் இருந்து பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அரசு ஆணைகளை வழங்கியுள்ளது.
தற்போது இந்த நிறுவனம் தான் புதிய நடைமுறையையும் மேற்கொள்ள உள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் அல்லது மோசடிகளை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து மதுபான கடைகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனையை 100 சதவீதம் இலக்குடன் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
* 17 கடைகளுக்கு அபராதம்
சமீபத்தில் கீழ்வேளூர், குத்தாலம், மயிலாடுதுறை, நாகை, சீர்காழி, தரங்கம்பாடி, திருக்குவளை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் செயல்படும் 17 மது கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை விட கூடுதலாக மதுபானங்களுக்கு வசூல் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.
