சத்திரங்கள் சொல்லும் சரித்திரங்கள்!

நம் தமிழ்நாட்டில் அமைந்திருந்த சமூக சேவைகளில் சத்திரங்களின் பணிகளும் ஒன்று. அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைத்து ஆலயங்கள் பதினாயிரம் நாட்டி, ஏழைகள் ஆயிரமாயிரம் பேர்களின் பசியாற்றி கல்வி புகட்டி வந்திருக்கும் சத்திரங்கள் மற்றும் சாவடிகள் பல அக்காலத்தில் இருந்து வந்திருக்கின்றன.‘‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’ என்னும் மணிமேகலை காப்பியத்தின் வாக்கிற்கேற்ப இச்சத்திரங்களும், சாவடிகளும் அமுதசுரபியாய் உணவு வழங்கியிருக்கின்றன; உணவோடு உடையும் அளித்திருக்கின்றன.

பொதுவாக சத்திரங்கள் என்பது, ‘‘வீணே காலத்தைக் கழிக்கும் சோம்பேறிகளின் மடம்’’ என்று தான் பெரும்பாலோனோரின் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருந்த சத்திரங்களோ ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கி அவர்களுக்கு உணவளித்தும், எழுத்தறிவித்தும் இந்த இரண்டு முக்கிய பணிகளை செய்து வந்திருக்கின்றன. இந்த சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மரபு வழிச் செய்தியும், வரலாற்றுப் பின்னணிப் பெருமையும் உணடு. தவிர இச்சத்திரங்கள் பற்றிய பல அரிய தகவல்களையும், செய்திகளையும் நாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அது சரி, சத்திரம், சாவடி என்றால் என்ன? அதன் சரியான விளக்கம் என்ன? முதலில் அதைப் பார்ப்போம். ‘‘சாத்திரம்’’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு பயணிகளை சமமாக நடத்துதல், வேறுபாடு கருதாது அவர்களை மதித்தல், அனைவரையும் ஒரு நிகராகக் கருதுதல் என்று பொருள்படும். சத்திரம் என்றால் ‘அன்னசாலை’ என்றும் கூறப்படுகிறது.

‘சாவடி’ என்பது, யாத்ரிகர்கள், வழிப் போக்கர்கள் அதாவது, வணிகர்கள் தங்குமிடம் அல்லது கிராமப் பொதுக் கட்டிடமாக இருந்திருக்கிறது. தமிழ் அகராதியில் இதற்கு ‘கச்சேரி’ என்ற ஒரு பொருளும் உள்ளது. இப்போது கூட கிராமங்களில் சாவடி என்ற ஓர் இடம் இருப்பதை நாம் காணலாம்.அக்காலத்தில் தமிழகத்தில் பெருவழிகள் இரண்டு முக்கிய பெரும் பிரிவுகளாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று, காசியிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பெருவழி.

இது மயிலாடுதுறை (மாயவரம்) மல்லியம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருபுவனம், தாராசுரம், திருவையாறு, வெண்ணாறு, தஞ்சாவூர், சூரக்கோட்டை, நீடாமங்கலம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, இராசாமடம். சேதுபாவா சத்திரம், இராமேஸ்வரம், தனுஷ்கோடி (சேதுக்கரை) வழியாகச் செல்கிறது. மேற்கண்ட இந்த இடங்களில் எல்லாம் மராட்டிய மன்னர் காலச் சத்திரங்கள் உள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதிகள், மருது பாண்டியர்கள், நகரத்தார் ஆகியோரால் கட்டப்பட்ட சத்திரங்களும் காணப்படுகின்றன.

இரண்டாவதாக, சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லுகின்ற பெருவழியில் (highways) பூந்தமல்லி (பூண்தண்மல்லி என்னும் பூவிருந்தவல்லி), ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், பிள்ளைச்சத்திரம், காஞ்சிபுரம், பாலுச்செட்டிச் சத்திரம், வாலாஜாபேட்டை, வேலூர் போன்ற இடங்களில் பல சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. இத்தகைய பெருவழிகளில் இருந்த சத்திரங்களை தமிழ் இலக்கியங்கள் ‘‘தாவளம்’’ என்று குறிப்பிடுகின்றன. ‘‘தாழ்ந்து’’ என்று சொல்லில் இருந்து வந்திருக்கும் தாவளம் என்பதற்கு ‘‘இளைப்பாறி’’ என்று அர்த்தம். எனவே, இளைப்பாறி (தாழ்ந்து) சென்ற இடம் தாவளம் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘தாவளம்’ என்னும் சொல் தங்குமிடத்தைக் குறிக்கிறது.

கிபி.1121ல் அனந்தகாலன் என்பவன் திருவாவடுதுறையில் சங்கரதேவன் அறச்சாலை, அனந்தபாலர்ப் பெருந்திருவாட்டி என்ற பெயர்களில் அறச்சாலைகள் அமைத்து தவசிகளுக்கும், அந்தணர்களுக்கும் உணவு அளிக்கும் பொருட்டு நிலம் வழங்கி அதில் மருத்துவம், இலக்கணம் முதலியவற்றைக் கற்போர்க்கு இலவச உணவு அளிக்கும் படி ஏற்பாடு செய்திருப்பதை அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. கன்னியாகுமரி முதல் கங்கை வரையில் அறச்சாலைகள் நிறுவி அன்னதானம் செய்திருக்கும் பெருந்திருவாளன் இந்த அனந்தகாலன் என்னும் தலைவன்.

யாத்ரிகர்கள் இரவு தங்கி உணவு உண்டு. நடந்த களைப்பு நீங்கி இளைப்பாறி ஓய்வெடுத்துக் கொண்டு தங்குவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளும் சத்திரங்களில் இருந்தன. இந்த சத்திரங்களின் வருமானத்தில் பெரும்பகுதி தர்மகாரியங்களுக்கும், உணவு, கல்வி, மருத்துவம் போன்றவைகளுக்கும் செலவழிக்கப்பட்டுள்ளது.ஒருநாளைக்கு இரண்டுவேளை உணவு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் எந்த பயணியும் தங்குவதற்கு அங்கே அனுமதிக்கப்படவில்லை. நடமாட முடியாத வயோதிகர்களுக்கு வீதிதோறும் உணவு எடுத்துச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

கதியற்றவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவு அளிக்கப்பட்டு வந்த இச்சத்திரங்களில் அதே சமயம் சோம்பேறிகளுக்கு உணவு அளிக்கக் கூடாது என்ற கண்டிப்பும் இருந்து வந்திருக்கிறது.
யாத்ரிகர்கள், பைராகிகள் (வடநாட்டு தேசாந்திரிகள்), மாணவர்கள் இவர்களுக்கென தனித்தனியாக உணவுத்திட்டம் இருந்திருக்கிறது. ஒவ்வொரு சத்திரத்திலும் பள்ளிகள் இருந்திருக்கின்றன. பல்வேறு பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதில் தங்கிப் படித்து வந்துள்ளனர். இவர்களுக்கு உணவு மட்டுமின்றி இலவச புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சத்திரத்திற்கு வரும் யாத்ரிகர்களும், வழிப்போக்கர்களும் நோய் வாய்ப்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென்று பெரிய சத்திரங்களில் சத்திர வைத்தியர் ஒருவர் இருந்திருக்கிறார். நோயாளிகள் நோய் நீங்கி குணமாகும் வரை அவர்களுக்குப் பத்திய உணவு அளிக்கப்பட்டது. சத்திரங்களில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ வசதி செய்து தரப்பட்டது. சத்திரங்களில் பணிபுரியும் அலுவலர்களும், பணியாளர்களும் சத்திரங்களில் உணவு கொள்ளக்கூடாது என்ற நியதி இருந்திக்கிறது. சமைப்பதற்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொருட்களைக் கொண்டு உணவு சரியாக சமைக்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை அரிசியில் கல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சத்திரத்திற்கு வருகிறவர்களின் வழிபாட்டிற்காக ஒவ்வொரு சத்திரத்திலும் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் பூசை செலவுக்காக ‘‘மோகினித் தொகை’’ என்ற பெயரில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் அமைந்துள்ள சத்திரங்கள் பெரும்பாலும் அரசர்கள், அவர்களது வழித்தோன்றல்கள், அடுத்து நகரத்தார், சமய நிறுவனங்கள் (மடங்கள்), பெருநிலக்கிழார்கள், வணிகர்கள், பெரும் செல்வந்தர்கள், பிற சமூகத்தினர் என மிகப் பலரும் நெடுஞ்சாலைகளில் பல சத்திரங்களைக் கட்டியுள்ளதை கல்வெட்டுக்களும், ஆவணங்களும் குறிப்பிடுகின்றன.

அந்நாளில் சத்திரங்கள் சாத்திரங்கள் பயிற்றுவிக்கும் இடங்களாக அமைந்திருந்தன. பெரிய திருமடங்களும் இத்தகைய பணிகளை செய்திருக்கின்றன. இவர்களது பணியில் சத்திரங்கள் உணவு சாலைகளாக மட்டுமின்றி மருத்துவச் சாலைகளாகவும் விளங்கி இருக்கின்றன.இதற்கு உதாரணமாக மங்கம்மா சத்திரத்தின் மங்காப்புகழைக் குறிப்பிடலாம். அதே போல் செட்டிநாட்டில் கஞ்சி மடம் அமைத்த பல குடும்பங்கள் இன்றும் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருவதைக் காணலாம். இதுபோல் இன்னும் பேர் தெரியாத செல்வந்தர்கள் கட்டி வைத்துவிட்டுச் சென்ற சத்திரங்கள் எத்தனையோ!

கி.பி.1743 முதல் 1937 வரை தஞ்சை மராட்டிய மன்னர்கள் இராமேசுவரம் செல்லும் பெரும் பாதைகளில் (Highways) யாத்ரிகர்கள் தங்கிச் செல்வதற்கான சத்திரங்களை நிறுவியுள்ளனர். இவை அம்மன்னர்களின் பெயரிலோ அல்லது அவர்களது ஆசை நாயகிகளின் பெயரிலோ அல்லது சகோதரர்கள் அல்லது குலதெய்வத்தின் பெயரிலோ கட்டப்பட்டவையாகும்.

மொகலாய மன்னன் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ்க்காக ஆக்ராவில் கட்டியது தாஜ்மகால் மராட்டிய மன்னன் 2ம் சரபோஜி தன் காதலி முத்தம்மாளுக்காக (முத்தாம்பாள் என்றும் கூறுகிறார்கள்) தஞ்சை ஒரத்தநாட்டில் கட்டியிருப்பது முத்தம்மாள் சத்திரம்.இந்த வரிசையில் 2 ஆம் சரபோஜிக்கு முன்பு ஆட்சி செய்த பிரதாப சிம்மன் தனது மனைவிகளான சக்ரவாம்பா பாயி, திரௌதாம்பாள், யமுனாம்பாள் ஆகியோரின் பெயரிலும்,2ஆம் துளஜா தனது மனைவிகளான இராஜசாம்பாள், இராச குமராம்பா, மோகனா சாஹேபா, சுலக்க்ஷணாபாயி சாகேப் ஆகியோரின் பெயரிலும் அன்னச்சத்திரங்கள் எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சத்திரங்களுள் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப் பெரிய சத்திரமாளிகை முத்தாம்பாள் சத்திரமாகும். முத்தாம்பாள் (முக்தாம்பாள்) என்பவள் தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர். அரண்மனை அதிகாரியின் தங்கை. இவள் இறக்கும் தறுவாயில் கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவம், கல்வி, பசிப்பிணி போக்கும் உணவு ஆகியவை வழங்க வேண்டும் என்று வேண்டியதின்பேரில் இரண்டாம் சரபோஜி மன்னரால் 1800 ஆம் ஆண்டு ஒரத்த நாட்டில் தன் காதலியின் நினைவால் கட்டியதுதான் இந்த முத்தாம்பாள் சத்திரம். கோயில், குளம், கல்விக்கூடம், மருத்துவமனை என்று காணப்பட்ட இச்சத்திரம், ஒரே சமயத்தில் 5000 பேர் தங்கக் கூடிய பிரம்மாண்டமான மாளிகையாகத் திகழ்ந்திருக்கிறது. உமையாள்புரத்திலிருந்து இச்சத்திரத்திற்கு கி.பி.1825ல் 13,007 கலங்கள் நெல் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி!

முத்தாம்பாள் சத்திரத்தில் மாணவர்களின் படிப்பிற்கு வேண்டிய நூல்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து பெறப்பட்டு திருப்பித் தரப்பட்டுள்ளன. இங்கு ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு 10 ரூபாய் இனாம் வழங்கப்பட்டுள்ளது. அறிவுப் பசிக்கு சரஸ்வதி மகால் நூல் நிலையம் என்பது போல் கல்விப் பசிக்கு முத்தாம்பாள் சத்திரமும் ஒன்று.

இச்சத்திரத்திற்கு 1825 ஆம் ஆண்டு ஆங்கிலேய ரெசிடென்ட் ஜான்ஃபைஃப் என்பவர் பார்வையிடச் சென்றபோது, அங்கிருந்த கல்வி நிலையங்களில் 641 பேர் கல்வி பயின்று வந்ததையும், மூன்று வேளையும் அங்கு 4020 பேர்கள் சாப்பிட்டதாகவும், பணியாளர்களுக்கு ஊதியம் மொத்தம் ரூபாய் 9000 செலவானதாகவும் ஆவணத்தின் மூலம் தெரிய வருகிறது. இராசாம்பாபுரம் அன்னசத்திரத்தில் (தாராசுரம்) இருந்து சரஸ்வதி மகாலுக்கு 1827ல் 501 எழுத்தாணிகள் அனுப்பப்பட்டன. திரௌதாம்பாள்புரம் என்பது மணமேற்குடியாகும். நீடா மங்கலத்திற்கு யமுனாம்பாள்புரம் என்பது மறுபெயர். மோகனாம்பாள் புரம் சத்திரம் இராஜாமடம் சத்திரம் எனப்படும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இச்சத்திரங்களின் மூலம் மக்கள் பயணடைந்து வந்துள்ளனர்.

சமூக நலன் மற்றும் பெண்கள் கல்வியை மேம்படுத்தவும் இராமேஸ்வரம் வரை யாத்திரை செல்லும் பொது மக்களும், பக்தர்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும் கட்டப்பட்ட இச்சத்திரங்களில் எந்தவித பாகுபாடுமின்றி உணவு வழங்கப்பட்டது. இச்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் சில கிராமங்கள் மாணியமாக வழங்கப்பட்டன. இந்த மானிய கிராமங்களிலுள்ள நிலங்களில் விளையும் தானியங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு சத்திரங்களில் வழங்கப்பட்டது.

சத்திரங்களுள் குறிப்பாக தஞ்சாவூர், ஒரத்தநாடு, நீடாமங்கலம், இராசாமடம் போன்ற இடங்களில் உள்ள சத்திரங்கள் பள்ளி மாணவர்கள் தங்கி பயிலும் விடுதிகளாக முன்பு செயல்பட்டு வந்தன.1873 ஆம் ஆண்டு வருவாய்த்துறை அறிக்கையின்படி 649 சத்திரங்கள் இருந்தன. அவற்றுள் 20 சத்திரங்கள் மராட்டியர்கள் காலத்தவை; 17 ஆங்கிலேயர்கள் காலத்தவை தஞ்சை பகுதியில் சத்திரங்கள் அமைந்த அளவிற்கு தென் இந்தியாவில் குறிப்பாக எந்தப் பகுதியிலும் சத்திரங்கள் காணப்படவில்லை. இது தஞ்சைக்கே உரிய சிறப்பு!

ஆனால், இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வலிவிழிந்து பொலிவிழந்து அழிந்து கிடக்கும் சத்திரங்கள் ஏராளம்! அவை சொல்லும் சரித்திரங்களும் ஏராளம்! ஏழை எளியோர் மற்றும் நலிந்தோரின் நல்வாழ்விற்குப் புகலிடமாக இருந்து நல்லறத்தைப் பேணி பாதுகாத்து சமுதாய முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகித்து வரும் இத்தகைய சத்திரங்களைப் போற்றி பாதுகாப்பதும் நம் கடமை.

கானமஞ்சரி சம்பத்குமார்

Related Stories: