ரயில் பயணிகளுக்கு காப்பீடு வழங்குவதில் பாரபட்சம்; ஆன்லைன் டிக்கெட்டுக்கு மட்டும் சலுகையா?.. ரயில்வே துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடெல்லி: இந்திய ரயில்வேயில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி (ஆப்ஸ்) வழியாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே விருப்பத் தேர்வு அடிப்படையில் பயணக் காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வெறும் 45 பைசா பிரீமியம் தொகையில், ரயில் விபத்து அல்லது அசம்பாவிதங்கள் நேர்ந்தால் உயிரிழப்பு மற்றும் நிரந்தர ஊனத்திற்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், ரயில் நிலையங்களில் உள்ள கவுண்ட்டர்களில் நேரிலும், முன்பதிவு செய்யாத பயணச்சீட்டு மூலமும் பயணம் செய்யும் கோடிக்கணக்கான சாமானிய பயணிகளுக்கு இந்த காப்பீட்டு வசதி மறுக்கப்பட்டு வருகிறது.

ஒரே ரயிலில் பயணம் செய்தாலும் டிக்கெட் வாங்கும் முறையை வைத்துப் பயணிகளிடம் காட்டப்படும் இந்த பாகுபாடு குறித்து நீண்ட காலமாகவே புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர், காப்பீடு வழங்குவதில் உள்ள இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டினார். இதனைத் தீவிரமாகப் பரிசீலித்த நீதிபதிகள், ‘ஆன்லைனில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஒரு நீதி, கவுண்ட்டரில் எடுப்பவர்களுக்கு ஒரு நீதியா?

டிக்கெட் வாங்கும் முறையை வைத்துப் பயணிகளிடம் ஏன் இத்தகைய பாகுபாடு காட்ட வேண்டும்?’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். மேலும், கவுண்ட்டரில் டிக்கெட் வாங்குபவர்களுக்கு ஏன் காப்பீடு இல்லை என்பது குறித்து ரயில்வே துறையிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: