ஈரோடு : ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். கடந்த 10 நாட்களாக, அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர், இயந்திரங்களைக் கொண்டு அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல் அங்கேயே போடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், வைக்கோல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடைகளுக்கான வைக்கோல் மழையில் நனைந்து வீணாகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், எஞ்சியுள்ள வைக்கோலை மட்டும், விவசாயிகள் தங்களது வயல்களில் உலர வைத்து வருகின்றனர்.
