நாகப்பட்டினம், நவ.27:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட 3 லட்சத்து 38 ஆயிரம் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் பரிசு வழங்கினார்.
அப்போது கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் -2026ம் ஆண்டை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு கணக்கெடுப்பு படிவத்தனை நிரப்பி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும்பெற்று அவர்களது செயலியில் பதிவேற்றம் செய்து அதை சரிபார்த்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கெடுப்பு படிவம் வழங்குவது மீண்டும் பெறுவது தொடர்பாக அனைத்து வட்டத்திலும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி மற்றும் நிரப்பப்பட்ட படிவத்தை மீண்டும் பெறும் பணிகள் கண்காணிப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தங்களுக்கு தேவையான விளக்கங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 104 கணக்கெடுப்பு படிவங்களும், கீழ்வேளுர் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 971 கணக்கெடுப்பு படிவங்களும், வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 124 கணக்கெடுப்பு படிவங்களும் என மொத்தம் 5 லட்சத்து 47 ஆயிரத்து 199 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 லட்ச்து 38 ஆயிரத்து 85 கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆகாஷ் கூறினார்.
