டெல்லியில் கடுமையான காற்று மாசு உச்ச நீதிமன்றத்தில் மெய்நிகர் விசாரணை குறித்து பரிசீலனை: வாக்கிங் சென்றால் கூட உடல் நிலை பாதிப்பதாக தலைமை நீதிபதி வேதனை

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி, ‘‘எனக்கு சுவாச பிரச்னை உள்ளது. காலையில் வாக்கிங் சென்று விட்டு வந்த பிறகிலிருந்து உடல் நலம் சரியில்லை. எனவே அடுத்த விசாரணையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விரும்புகிறேன். அதற்கு அனுமதி தர வேண்டும்’’ என்றார்.

இதைக் கேட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘காற்றின் தரம் (ஏக்யூஐ) 400-500 என்ற மோசமான நிலையில் இருக்கும் போது வயதானவர்கள் அந்த காற்றை சுவாசிப்பதால் உடல் நலம் பாதிக்கிறது’’ என்றார். இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘காலையில் ஒரு மணி நேரம் வாக்கிங் சென்று விட்டு வந்ததும் எனக்கும் உடல் நலம் சரியில்லாமல் போனது. டெல்லியில் கடுமையான காற்று மாசால் வெளியில் கூட செல்ல முடியவில்லை. எனவே, 60 வயதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு மெய்நிகர் முறையில் விசாரணை நடத்த அனுமதிப்பது குறித்து யோசனை குறித்து பரிசீலிக்கிறேன். இது குறித்து மாலையில் கலந்தாலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: