சிவகாசி, நவ. 26: சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியை சேர்ந்தவர் கென்னடி கண்ணன் (62). இவர் சிவகாசி விஸ்வநத்தம் ரோடு பட்டி தெருவில் பட்டாசிற்கு தேவையான பேப்பர் கட்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த கம்பெனி அருகே பகல், இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் மது அருந்தி வந்ததாகவும், இதனை கென்னடி கண்ணன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று காலை வழக்கம் போல் கட்டிங் கம்பெனி அருகே சில இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். இதனை கென்னடி கண்ணன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து இளைஞர்கள் கென்னடி கண்ணன் கட்டிங் கம்பெனியின் ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் கட்டிங் கம்பெனியில் தீப்பிடித்த நிலையில் லேசான காயத்துடன் கென்னடி கண்ணன் உயிர் தப்பினார். காயமடைந்த கென்னடிகண்ணன் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்ததும் சிவகாசி டிஎஸ்பி அணில் குமார் மற்றும் சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கம்பெனியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
