அரசு நடுநிலைப்பள்ளியில் களைகட்டிய இயற்கை உணவு திருவிழா: மாணவ, மாணவிகள் அசத்தல்

ராமேஸ்வரம், நவ. 26: ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி எண்.1ல் நேற்று இயற்கை உணவு திருவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் இராமநாதன் தலைமை வகித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் செய்த இயற்கை உணவுகளை சுவைக்கு வைத்தனர். இதிலல் 300க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.

இதில் முருங்கை, வெற்றிலை, துளசி அல்வா சிறப்பு இடம் பெற்றிருந்தது. மேலும் கம்பு, கேழ்வரகு, சோளம், கடலை, பருப்பு உள்ளிட்ட சிறுதானியங்களில் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவு பண்டங்கள் வைத்து அசத்தினர். இதை தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களின் சொந்த முயற்சியால் உருவாக்கிய படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவது, சந்திராயன் 3 இயங்கும் விதம், மழைநீர் சேகரிப்பு, காற்று மாசுபடுதலை தவிர்த்தல் ஆகியவற்றை குறித்த 50க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி செய்தார். ஆசிரியர்கள் வீரசுந்தரி, சரண்யா, முகமது பத்தாக், சரண் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முரளீஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: