×

45 ஏக்கரில் ரூ.208.50 கோடியில் உலக தரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது; கோவையில் செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோவையில் கடந்த 2010ல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் கலைஞர், மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில், செம்மொழிப் பூங்கா அமைக்க கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வகையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்றன. அதன்படி, தாவரவியல் பூங்கா, சூரியதகடு, சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழிப் பூங்காவிற்கு எடுத்து வருதல், பூங்கா வளாகத்தில் தரைத்தள வாகன நிறுத்துமிடம், நிலத்தடி நீர்த்தொட்டி, மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள், தரைத்தள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் உலகத்தரத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் பொறுப்பேற்ற பிறகு 16வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் நடந்து சென்று பூங்காவை சுற்றிப் பார்த்த அவர், செயற்கை நீர் வீழ்ச்சியை டிரோன்கள் மூலம் திறந்து வைத்தார். மேலும் பூங்கா வளாகத்தில் அரச மரக்கன்றை நட்டு வைத்தார். இதையடுத்து பூங்கா வளாகத்தில் வைக்கபட்டுள்ள கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளை பார்வையிட்ட அவர், பூங்கா வளாகத்தில் செய்யப்பட்ட வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பேட்டரி கார் மூலம் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்களையும் பார்வையிட்டார். பின்னர், பள்ளி குழந்தைகள், முக்கியப் பிரமுகர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மேலும் திறந்தவெளி அரங்கினையும் பார்வையிட்ட அவர், அங்கு நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார்.

இதைதொடர்ந்து கோவை செட்டிபாளையம் அருகே ஓராட்டுக்குப்பை பகுதியில் ரூ.5 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 86 மாற்றுத்திறனாளிகள் குடியிருப்புகளை கானொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 3 பயனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளை ஒப்படைத்தார். செம்மொழிப் பூங்காவின் கட்டிக்கலை நிபுணர்கள், ஒப்பந்ததாரர், திட்ட மேலாளர் ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
முதல்வருக்கு அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினர். இதையடுத்து செம்மொழிப் பூங்கா வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த மாணவிகள் முதலமைச்சருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ. சாமிநாதன், டி.ஆர்.பி. ராஜா, கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிராபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞரின் கையெழுத்தில் செம்மொழிப் பூங்கா பெயர்
செம்மொழிப் பூங்கா வளாகத்தின் முகப்பு பக்கத்தில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள செம்மொழிப் பூங்கா என்ற பெயர், கலைஞரின் கையெழுத்து வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞரால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதை நினைவுகூரும் வகையில், இந்த வடிவமைப்பில் அப்பெயர் அமைக்கப்பட்டுள்ளது.

தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்: முதல்வர் பெருமிதம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கோவையில் செம்மொழிப் பூங்கா – தலைவரும், தந்தையுமான கலைஞர் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி, குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

செம்மொழிப் பூங்காவின் சிறப்பம்சங்கள்

  • செம்மொழிப் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகளை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் நடப்பட்டுள்ளன.
  • செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம்தரும் வனம், நறுமண வனம் உள்ளிட்ட 23 விதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளன.
  • அனுபவ மையக் கட்டடம், 500 நபர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லரை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • அனுபவ மையக் கட்டடத்தில் பழங்கால தமிழர்கள் உபயோகப்படுத்திய பொருட்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாக படிப்பகம், முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. .
  • குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டுத்திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை‌, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேக விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
  • செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவாயில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு, மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
  • செம்மொழிப் பூங்கா தரை தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டமைப்பு உருவாக்கி உள்ளனர்.
Tags : Chief Minister ,M.K. Stalin ,Classical Language Park ,Coimbatore ,Gandhipuram ,World Tamil Classical Language Conference ,Kalaignar ,Central… ,
× RELATED குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை...