×

அடித்து திருத்தம் செய்த ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: யார் யாருக்கு வாய்ப்பு; வெளியான உத்தேச பட்டியல்

சென்னை: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், புதிதாக தயார் செய்யப்பட்ட பட்டியலை ராகுல்காந்தி அடித்து திருத்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாருக்கு வாய்ப்பு என்ற உத்தேச பட்டியலும் வெளியாகியுள்ளது.  காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஒரு பெரும் படையே கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடியதாக எழுந்த தகவலால் ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் புதிய வேட்பாளர் பட்டியலை தயார் செய்ய ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இரண்டாவது பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியலை வைத்துக் கொண்டு கே.சி.வேணுகோபால், கிரிஸ் சோடங்கர் இருவரிடமும் ராகுல் காந்தி விவாதித்தனர். இதை தொடர்ந்து, வேட்பாளர் பட்டியல் அடித்து திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இதில் கிட்டத்தட்ட வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலை இருப்பதாக காங்கிரஸ் எம்பிக்களும் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே, யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் – செல்வபெருந்தகை, கிள்ளியூர் – ராஜேஷ் குமார், பொன்னேரி – பெ.விஸ்வநாதன், இமயா கக்கன், ரஞ்சன்குமார் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம்.

இதில் முன்னாள் காஞ்சிபுரம் எம்பியான பெ.விஸ்வநாதனுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊட்டி- கணேஷ் அல்லது நரேஷ் சந்திரன், ஈரோடு கிழக்கு — மக்கள் ராஜன் அல்லது ஈவிகேஎஸ் சஞ்சய், அறந்தாங்கி – ராமச்சந்திரன், மயிலாடுதுறை – ராஜ்குமார், காரைக்குடி – மாங்குடி, சிவகாசி – அசோகன் அல்லது சொக்கர், திருவாடானை – கரு.மாணிக்கம், ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ், நாங்குநேரி – பரப்பாடி காமராஜ் அல்லது ரூபி மனோகரன், குளச்சல் – பிரின்ஸ், லாரன்ஸ், பினுலால் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

துறையூர்- லெனின் பிரசாத், சங்கரன்கோயில்(தனி)- பாக்கியராஜ், அம்பை – எம்.எஸ்.காமராஜ், எம்.எஸ்.திரவியம், வி.பி.துரை ஆகியோரில் ஒருவர் தேர்வாகிறார். ஆத்தூர் – அர்த்தநாரி, வேளச்சேரி – அசன் மவுலானா, கவுண்டம்பாளையம் – மனோகர் அல்லது சக்திவேல் கவுண்டர், சிங்காநல்லூர் – மயூரா ஜெயக்குமார் அல்லது சூர்ய பிரகாஷ், கடலூர் – பி.வி.ராஜேந்திரன் அல்லது ராதாகிருஷ்ணன்,

சோளிங்கர் – முனிரத்னம் அல்லது சுமதி அன்பரசு, பென்னாகரம் – தமிழ் குமரன் அல்லது கார்த்திக் தங்கபாலு, கிருஷ்ணகிரி – டாக்டர் செல்லக்குமார் அல்லது ஹசீனா சையத், உசிலம்பட்டி – ராஜா முஹம்மது அல்லது கார்த்திகேயன், மேலூர் – ரவிச்சந்திரன் ஆகியோர் வேட்பாளராக தேர்வாக வாய்ப்புள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Rahul Gandhi ,Congress ,Chennai ,
× RELATED குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை...