ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் துன்புறுத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தது சீனா: அருணாச்சலை சேர்ந்தவர் என்றதால் நடந்த அட்டூழியம்

பீஜிங்: இங்கிலாந்தை சேர்ந்த இந்திய பெண் பெமா வாங்ஜோம் தோங்டாக். இவர் கடந்த 21ம் தேதி லண்டனில் இருந்து ஜப்பானுக்கு சென்றுள்ளார். இப்பயணத்தில் விமானம் மாறுவதற்காக ஷாங்காய் விமான நிலையத்தில் 3 மணி நேரம் தங்கி செல்ல வேண்டியிருந்தது. அப்போது, ஷாங்காய் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் செய்த சோதனையில் பெமா அருணாச்சல பிரதேசத்தில் பிறந்தவர் என கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் அவரது பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக பெமா சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டார்.

பின்னர் நண்பர்கள் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் இரவு விமானத்தில் பெமா ஷாங்காயில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் நேற்று அளித்த விளக்கத்தில், ‘‘சம்மந்தப்பட்ட பெண் கூறியது போல் எந்தவொரு கட்டாய நடவடிக்கைகள், தடுப்பு காவல் மற்றும் துன்புறுத்தல்கள் நடக்கவில்லை. சீன அதிகாரிகள் சட்டப்படியான செயல்முறைகளை மேற்கொண்டனர். அந்த பெணணின் சட்டப்பூர்வ உரிமைகள் நலன்களை முழுமையாக பாதுகாத்தனர். அவர் ஓய்வெடுக்க, குடிக்க தண்ணீர், உணவு ஆகியவை விமான நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்து தரப்பட்டது’’ என்றார்.

சீனா அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வருகிறது. அதை ஜங்னான் என பெயரிட்டு தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக கூறி வருகிறது. ‘‘ஜங்னான் சீனாவின் பிரதேசம். அதை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை’’ என்றும் மாவோ நிங் கூறி உள்ளார். இச்சம்பவம் நடந்த உடனேயே டெல்லியிலும், ஷாங்காயிலும் இந்திய தூதரகம் மூலம் கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. இது சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல் என்றும், இந்திய மக்களின் கண்ணியத்திற்கு அவமானம் என்றும் அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: