நகை திருடிய குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் 30% இழப்பீடு: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நகை திருட்டு வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் 30 சதவீத தொகையை இழப்பீடாக வழங்க வேண்டுமென அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் வசிக்கும் சுஜா சங்கரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2015ல் எனது வீட்டை உடைத்து சுமார் 75 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் உள்ளிட்ட ரூ.8.81 லட்சம் மதிப்பிலான நகை, பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்து 9 வருடங்கள் ஆனது. ஆனால் போலீசார் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, நகை திருட்டு தொடர்பான குற்ற வழக்கை கண்டறிய முடியவில்லை என முடித்து விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக எனக்கு எந்த ஒரு நோட்டீசும் கொடுக்காமல், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டனர். எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றி கொள்ளையடிக்கப்பட்ட நகையை கண்டுபிடித்து தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இது போன்று நகை திருட்டு வழக்குகளில் கண்டுபிடித்து தரக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் ஆகி வருகின்றன. நகை திருட்டு புகார் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்க முடியவில்லை என அந்த வழக்குகளை போலீசார் முடித்து விடுகின்றனர்.

போலீசார் பதிவு செய்த நாளில் இருந்து, ஒரு குறிப்பிட்ட, கால இடைவெளிக்குள், நகை திருட்டு புகார்தாரருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். திருடு போன நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீத தொகையை புகார்தாரருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இது போன்று பல்வேறு நகை திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளது. அந்த வழக்குகளின், நிலவரம் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது, ஏடிஎஸ்பி தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.

நகை திருட்டு வழக்கில் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை, விசாரணை நடத்தி கண்டுபிடிப்பதற்காக திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளை கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும். விசாரணையின் உத்திகள், மற்றும் புகார்தாரருக்கும் அரசுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் குறித்து நவீன முறையில் ஆன்லைன் மூலம் கையாள்வது எப்படி என்பது குறித்து விசாரணை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொழில்நுட்ப புத்துணர்வு பயிற்சி வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: