பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளில் 100 சதவீத இலக்கை அடைந்த பிஎல்ஓக்கள்

 

பெரம்பலூர், நவ.25: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எட்டிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மிருணாளினி நேரில் அழைத்துப் பாராட்டினார். பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மிருணாளினி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எட்டிய 8 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களையும் அவர்களுக்கான கண்காணிப்பாளர்களையும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி அதை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பம் பெற்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாத வாக்காளர்கள் அல்லது கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் இடர் பாடுகளை எதிர்கொள்ளும் வாக்களர்களுக்கு உதவிட தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் 22ஆம்தேதி மற்றும் 23ஆம்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. அதனடிப்படையில், சிறுவாச்சூர் பகுதி எண் 267ல் பணிபுரிந்த பிரேமா, பகுதி எண் 268ல் பணிபுரிந்த வீரமணி, பகுதி எண் 269ல் பணிபுரிந்த சரஸ்வதி, அயிலூர் கிராமத்தில் பகுதி எண் 270ல் பணிபுரிந்த பேபி இந்திரா, பகுதி எண் 271ல் பணிபுரிந்த தமிழ்செல்வி, பகுதி எண் 272ல் பணிபுரிந்த கிருஷ்ண வேனி,

அ.குடிக்காடு கிராமத்தில் பகுதி எண் 273ல் பணிபுரிந்த செல்வி, எறைய சமுத்திரம் கிராமத்தில் உள்ள பகுதி எண் 274ல் பணிபுரிந்த சுந்தரவள்ளி ஆகிய 8 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் தங்கள் பகுதிக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களிடமும், கணக்கீட்டுப் படிவத்தை வழங்கி அதை முறையாக பூர்த்தி செய்வதற்கான விளக்கங்களையும் கொடுத்து, படிவத்தை பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுவோருக்கு உதவி, அனைத்து படிவங்களையும் திரும்பப் பெற்று அவற்றை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி முழு இலக்கையும் எட்டிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். மேலும், 100 சதவீதம் கணக் கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து திரும்பப்பெற்று, செயலியில் பதிவேற்றம் செய்ய எவ்வாறெல்லாம் பணியாற்றினீர்கள் என்பது குறித்து பிற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் விளக்குங்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.

 

Related Stories: