புதுக்கோட்டை, நவ.25: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டுநாட்கள் பரவலாக மழை பெய்து வருகிறது, மாவட்டத்தில் சராசரியாக 5.4 செமீ மழை பதிவாகி உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மிதமான மழை பெய்து வரக்கூடிய நிலையில் நேற்றும் அவ்வப்போது மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளும் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அடப்பன் வயல் அருகே உள்ள அடப்பன்குளம் நிரம்பி தொடர்ச்சியாக குளத்திலிருந்து வெளியாகும் உபரி நீர் கால்வாயில் சென்று வருகிறது.
மேலும் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் தேங்கி இருக்கக்கூடிய நிலையில் இனி வரக்கூடிய நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தால் குடியிருப்புகளிலும் விளை நிலங்களிலும் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆயங்குடியில் 8.2 செமீ, ஆலங்குடியில் 8 செமீ, கந்தர்வக்கோட்டையில் 7.7 செமீ, பொன்னமராவதியில் 7.4 சென்டிமீட்டர் மழையும் அன்னவாசலில் 7.2 செமீ, மழையூரில் 6.9 செமீ, ஆவுடையார் கோவிலில் 6.84 செமீ மழையும், புதுக்கோட்டையில் 6.1 செமீ மழை என மொத்தம் மாவட்டத்தில் சராசரியாக 5.4 செமீ மழை பொழிவு பதிவாகியுள்ளது.
