மண்பாண்டத்தால் கிடைக்கும் நன்மைகளை பாடப்புத்தகத்தில் சேர்க்கக்கோரி மனு

 

சிவகங்கை, நவ. 25: மண்பாண்டத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மானாமதுரையை சார்ந்த தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராதா, மகளிர் அணி அமைப்பாளர் நதியா ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஆண்டு தோறும் தமிழக அரசு விலையில்லாமல் வழங்கி வருகிறது. இவைகளுடன் பொங்கலிட களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு புதுப்பானையும், ஒரு புது அடுப்பும் எங்களிடம் கொள்முதல் செய்து விலையில்லாமல் தர வேண்டும். இக்கோரிக்கையை வரும் பொங்கல் திருநாளில் செயல்படுத்தி மண்பாண்டத் தொழிலாளர்களின் பொருளாதார உயர்வுக்கு உதவி செய்ய வேண்டும்.

மழை காலங்களில் மண்பாண்டத் தொழில் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அரசால் வழங்கப்படும் ரூ.5,000 மழைக்கால நிவாரண உதவித் தொகையை ரூ.10,000 ஆக அதிகரித்து வழங்க வேண்டும். தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய சக்கரத்தை இலவசமாக வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிற வீட்டிற்கும், தொழில் செய்யும் இடத்திற்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்டங்களில் உணவை சமைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளிப் பாடபுத்தகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: