நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் 92 மனுக்கள் பெறப்பட்டது

 

நாகப்பட்டினம், நவ.25: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 92 மனுக்கள் பெறப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இதில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 92 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் செவித்திறன் குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.3 ஆயிரத்து 285 மதிப்பில் காதொலிக்கருவி, இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். இக்கூட்டத்தில் டிஆர்ஓ பவணந்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: