கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு மோடி தலையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக டெல்லி வந்து சந்திக்க தயார் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான கோவைக்கும், கோயில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு எங்களது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்து கொள்கிறோம். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். அதிக அளவிலான தனிநபர் வாகனங்களை கொண்டும், நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வரும் நிலையில், அனைத்து வகையிலும் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பெரும் நகரங்களில், அதிக திறன் கொண்ட பொது போக்குவரத்து மாற்றுகள் தேவைப்படுகிறது.

இதற்காக, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை நாங்கள் தயாரித்து, அதை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி இருக்கிறோம். தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்திருப்பது, அந்த 2 பெருநகரங்களில் வாழும் மக்களிடையே ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 திட்டங்களின் உயர் முன்னுரிமையை கருத்தில் கொண்டு, தொடர்புடைய அமைச்சகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

இந்நிலையில், கடந்த மே 24ம் தேதி மற்றும் ஜூலை 26ம் தேதி தங்களை (பிரதமர்) நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முன்னுரிமை கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை சமர்ப்பித்து, இத்திட்டங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியதையும் நினைவு கூர்கிறேன். மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கோரிக்கையை நிராகரித்தது எங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள காரணங்கள் பொருத்தமற்றவை. மெட்ரோ ரயில் கொள்கை 2017ல் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று, 20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவுகோல் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளோம். கோவை உள்ளூர் திட்ட பகுதியின்படி அதன் மக்கள் தொகை 2011ம் ஆண்டிலேயே 20 லட்சத்தை தாண்டியிருந்தது. மதுரையிலும் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். இந்த 20 லட்சம் என்ற அளவுகோல் ஒரேமாதிரியாக கருத்தில் கொள்ளப்பட்டிருந்தால், ஆக்ரா, இந்தூர் மற்றும் பாட்னா போன்ற 2ம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை.

இந்த அளவுகோலை கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு சுட்டிக்காட்டுவது என்பது, எங்களது இந்த நகரங்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் பாகுபாட்டு நிலையையே காட்டுகிறது. எனவே ஒன்றிய அரசு, மற்ற மாநிலங்களில் மேலே குறிப்பிடப்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட மேற்கொண்ட முடிவினை போன்று, தமிழ்நாட்டிலுள்ள இந்த மாநகரங்களிலும் செயல்படுத்திட ஏதுவாக இந்த அளவுகோலை நீக்க வேண்டும்.
கோவை நகரில் இந்த திட்டத்திற்கான பயணிகளின் அடர்வு எண்ணிக்கை, சென்னையில் உள்ள பயணிகளின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை என்பது பல காரணிகளை சார்ந்திருப்பதால் இது பொருத்தமானதல்ல. இந்த 2 நகரங்களும் சென்னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளை கொண்டுள்ளன. விரிவான போக்குவரத்து ஆய்வுகளுக்கு பிறகு ரிட்ஸ் தயாரித்த கோவைக்கான விரிவான இயக்க திட்டம், முன்மொழியப்பட்ட துறைகளில் மெட்ரோ ரயில் பயணத்தின் தேவையை தெளிவாக கணித்துள்ளோம். மதுரைக்கும், 2011ம் ஆண்டின் விரிவான இயக்க திட்டத்தில், பொது போக்குவரத்து அமைப்பு முன்மொழியப்பட்டது. ஆனால் பெரும்பாலான பாதைகளின் நீளம் உயர்த்தப்பட வேண்டியிருப்பதால், ரயில் போக்குவரத்திற்கான அமைப்பையும் பரிசீலிக்கலாம்.

மேலும், விரிவான திட்ட அறிக்கை ஆய்வுகள் போக்குவரத்து கணிப்புகளின் அடுத்தடுத்த, தனிப்பட்ட மதிப்பீடுகளை செய்துள்ளன. இது மெட்ரோ ரயில் வழித்தடங்களின் தேவையை நியாயப்படுத்தியது. இந்த காரணிகள் போதுமான அளவு கருத்தில் கொள்ளப்படவில்லை. மெட்ரோ ரயில் திட்டங்களின் நீண்டகால சமூக-பொருளாதார நன்மைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம். தமிழ்நாட்டில் தற்போதைய திட்டத்தில் நில உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், இழப்பீட்டை நாங்கள் வழங்கி வருகிறோம். கோவை மற்றும் மதுரை நகரங்களில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது என்பது ஒரு தடையாக இருக்காது.

இந்த சூழ்நிலையில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு உரிய, விரிவான விளக்கங்களை சமர்ப்பிக்க சிறப்பு முயற்சிகள் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அதனடிப்படையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கருத்துருவை திருப்பியனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிடுங்கள். தேவைப்படின் இத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க எனது குழுவுடன் புதுடெல்லியில் தங்களை (பிரதமர்) சந்திக்க தயாராக இருக்கிறோம். இந்த 2 திட்டங்களும் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் கலாச்சார மையத்தினை உள்ளடக்கியது. அதனால் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* ‘தமிழ்நாட்டின் வளர்ச்சி; இந்தியாவின் வளர்ச்சி’
முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒவ்வொரு மனுவிலும், உங்களை (பிரதமர்) சந்தித்த ஒவ்வொரு சந்திப்பிலும் தொடர்ந்து கோரி வருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு மிக பெரிய அளவில் பங்களிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டு மக்கள், இந்த திட்டங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதால் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். இவை எங்கள் மாநிலத்தின் வளர்ச்சி இயந்திரங்களுக்கு அத்தியாவசியமான உள்கட்டமைப்பு திட்டங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது இந்தியாவின் வளர்ச்சியே ஆகும். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் புறநிலை மற்றும் நியாயமான அணுகுமுறையை எதிர்நோக்கி உள்ளோம். இத்திட்டங்களின் முக்கியத்துவத்தை விளக்க எனது குழுவுடன் உங்களை சந்திக்க நான் எப்போதும் தயாராக உள்ளேன்.

* கோவை மற்றும் மதுரை நகரங்கள் சென்னையிலிருந்து வேறுபட்ட பயண முறைகளை கொண்டுள்ளன. சென்னையில் உள்ள பயணிகளின் அடர்வு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
* கோவை மற்றும் மதுரை நகரங்களில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது என்பது ஒரு தடையாக இருக்காது.
* தற்போதைய திட்டத்தில் நில உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், இழப்பீட்டை நாங்கள் வழங்கி வருகிறோம்.
* மற்ற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கோரிக்கையை நிராகரித்தது எங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: