சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: எஸ்ஐஆர் மூலமாக பாஜ எதிர்ப்பு வாக்குகளை எல்லாம் நீக்க முயற்சி எடுக்கிறார்கள். இந்த மோசடியை எதிர்த்துதான் இன்றைக்கு திமுகவினர் நீங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களுக்காக, அவர்களின் ஓட்டுரிமைக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இங்கு இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார்? எஸ்ஐஆருக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஏனென்று கேட்டால், ”திமுக எதிர்க்கிறது, அதனால் நாங்கள் ஆதரிக்கிறோம்” என்கிறார். உச்ச நீதிமன்றத்தில் அதற்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். பாஜவுக்கு இன்றைக்கு நாடு முழுவதும், பல மாநிலங்களில் அடிமைகள் வாய்க்கலாம். ஆனால், நம் ஊரில் இருக்கிற அதிமுக அடிமைகள் மாதிரி ஒரு கடைந்தெடுத்த அடிமைகள் எந்த மாநிலத்திலும் சிக்க மாட்டார்கள்.
அதனால்தான் பாஜவின் நம்பர் ஒன் அடிமைகள் அவர்கள்தான் என்று நிரூபிக்க, எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அண்ணா சொன்ன ஒரு சின்னக் கதையை, இங்கு குறிப்பிட விரும்புகிறேன். திருவிழாக் கூட்டத்தில் ஒரு திருடன் பிக்பாக்கெட் அடித்துவிடுகிறான். பணத்தைப் பறிகொடுத்தவன், ”ஐயோ திருடன்! திருடன்!” என்று கத்துகிறான்.
உடனே கொஞ்சம் பேர் அந்த திருடனைப் பிடிப்பதற்கு ஒரு பக்கம் ஓடுவார்கள். அந்த கூட்டத்தில் திருடனே, இன்னொரு திருடனைச் செட் பண்ணி, வேடிக்கை பார்க்கிற மாதிரி செட் பண்ணி வைத்திருப்பான். அந்த திருடன் எல்லாரையும் திசை திருப்ப வேண்டும் என்று ”திருடன் இந்தப் பக்கம் ஓடினான்” என்று எல்லாரையும் திசை மாற்றுவான். மக்களை திருப்பி விடுவான்.
இதனால் அந்தத் திருடன் தப்பித்துச் செல்வதற்கு அவன் வழி வகுத்துக் கொடுப்பான். அந்த மாதிரிதான் இன்றைக்கு மக்களை திசை திருப்ப, வாக்குகளை திருடுபவர்களை எல்லாம் தப்பிக்க வைக்கிற வேலையை இந்த அடிமைக் கூட்டம் செய்துகொண்டு இருக்கிறது. நான் சொன்ன முதல் திருடன் அதிமுக, இரண்டாவது திருடன் பாஜ தலைமையில் இயங்குகின்ற தேர்தல் ஆணையம்.
மக்களவை தேர்தலின்போது 8 முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்தது ஒரே ஒரு முட்டை தான். இப்போது மீண்டும் மோடி சட்டமன்றத் தேர்தல் வருவதால், வர ஆரம்பித்திருக்கிறார்.
தலைவர் சொன்னது மாதிரி குறைந்தது 200 தொகுதிகளில் நம் கூட்டணி நிச்சயம் வென்று தலைவர் தொடர்ந்து 2வது முறைஆட்சி அமைப்பார். அதற்கு அத்தனை பேரும் இன்றிலிருந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
