பெங்களூரு: கப்பல் கட்டுமானம் குறித்த முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 2 பேரை உடுப்பி போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் மால்பேவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இன்சுலேட்டராக பணிபுரிந்தவர் ரோஹித் (29). அதேபோல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிந்தவர் சான்ட்ரி (37). உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும், கப்பல் கட்டுவது குறித்த முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கார்கலா ஏஎஸ்பி ஹர்ஷ் பிரியவடா கூறுகையில், கப்பல் கட்டும் விவரங்கள், கப்பல் எண்கள் மற்றும் பிற பட்டியல்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இவர்கள் இருவரும் வாட்ஸ் அப் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவின் கடல்சார் உட்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் என்பதால் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது என்று கூறினார்.
