சென்னை: பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட தீர்ப்பில் எனக்கு எந்த அதிசயமும் ஏற்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் மீது இருந்த நம்பிக்கை ஏற்கனவே போய்விட்டது என்றும் பாதிக்கப்பட்ட நடிகை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 8 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் கடந்த 12ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட முதல் 6 பேருக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப் உள்பட 4 பேர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை இன்ஸ்டாகிராமில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது:
8 வருடம், 9 மாதம், 23 நாட்கள்…. மிகவும் வேதனையான இந்த காலகட்டத்தின் இறுதியில் நான் ஒரு சிறிய வெளிச்சத்தை பார்த்தேன். நீதிமன்றம் 6 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது. எனது வலியும், வேதனையும் பொய்யானது என்றும், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றும் கூறியவர்களுக்கு இந்த தீர்ப்பை நான் அர்ப்பணிக்கிறேன். எனக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பியவர்களுக்கு இப்பொழுது சற்று நிம்மதி ஏற்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். அதுபோல இந்த வழக்கில் முதல் குற்றவாளி என்னுடைய சொந்த டிரைவர் என்று கூறுவதில் எந்த உண்மையும் கிடையாது. அந்த நபர் என்னுடைய டிரைவரோ, ஊழியரோ, எனக்குத் தெரிந்தவரோ கிடையாது. 2016ல் நான் நடித்த ஒரு பட நிறுவனத்தின் டிரைவராகத் தான் அவர் வந்தார். சம்பவம் நடப்பதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே நான் அந்த நபரை பார்த்துள்ளேன்.
எனவே அந்த நபருக்கும், எனக்கும் ஏற்கனவே தொடர்பு உண்டு என்று சிலர் கூறுவதை நிறுத்த வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பலருக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கும். ஆனால் எனக்கு அதில் எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. 2020ம் ஆண்டின் இறுதியில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நீதிமன்றத்தில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களிலிருந்தே நான் இதை புரிந்துகொண்டேன். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் நடந்து கொண்டது தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் 2 அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் மீது குற்றம்சாட்டி பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டது என்று கூறி கடந்த சில வருடங்களாக நான் உயர் நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகினேன். குறிப்பிட்ட இந்த நீதிபதியிடமிருந்து விசாரணையை மாற்ற வேண்டும் என்று நான் மன்றாடினேன். ஆனால் என்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ச்சியான வலி, கண்ணீர் மற்றும் மன கொந்தளிப்புகளுக்கு பின்னர் நான் இப்போது ஒன்றை உணர்ந்துள்ளேன். சட்டத்தின் முன் இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் அல்ல. இதை எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி. இவ்வாறு பாதிக்கப்பட நடிகை 9 பக்கங்களில் வெளியிட்டுள்ள தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை இழந்ததற்கான காரணம்: இந்த வழக்கில் என்னுடைய அடிப்படை உரிமைகள் எதுவுமே மதிக்கப்படவில்லை. இந்த வழக்கில் முக்கிய ஆவணமான மெமரி கார்டு நீதிமன்றத்தில் வைத்து 3 முறை திறந்து பார்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்டேன். அந்த விசாரணை அறிக்கையை பலமுறை கேட்டும் எனக்கு நீதிமன்றம் தரவில்லை. கடைசியில் உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான் எனக்கு கிடைத்தது. இந்த வழக்கு விசாரணையில் பல தகவல்கள் மூடி மறைக்கப்பட்டன. எனவே பொதுமக்களுக்கும் இது தெரியவேண்டும் என்பதற்காக வழக்கு விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் எதிர் தரப்பின் கோரிக்கையை ஏற்று மூடப்பட்ட நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்தப்பட்டது. உயர்ந்த நீதி உணர்வு கொண்ட நீதிபதிகள் இப்போதும் இருப்பார்கள் என நான் நம்புகிறேன் என்று தெரியும் என்று தன்னுடைய பதிவில் நடிகை குறிப்பிட்டுள்ளார்.
நீதி நிலைநாட்டப்படவில்லை: நடிகை மஞ்சு வாரியர் கருத்து
நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பது:சதித் திட்டம் தீட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பகல் வெளிச்சத்தில் வெளியே உள்ளனர் என்பது அச்சப்படுத்தும் ஒரு உண்மையாகும். அவர்களுக்கும் தண்டனை கிடைத்தால் தான் பாதிக்கப்பட்டவருக்கு நீதி முழுமையாக கிடைத்ததாக கருத முடியும். போலீஸ் மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் அது நடந்தே ஆக வேண்டும். இது அந்த நடிகைக்கு மட்டுமல்ல, நம் நாட்டின் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் பெண்ணுக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமாகும். தெருவிலும், தொழில் செய்யும் இடங்களிலும், வாழ்க்கையிலும் தலையை உயர்த்தியபடி பயப்படாமல் வாழும் நிலை அனைவருக்கும் வரவேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
