பெங்களூரு: முட்டைகளில் புற்றுநோய் உண்டாக்கும் கூறு இருப்பதாக பரவிய தகவல் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்று அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். முட்டைகளில் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
பிரபலமான சில பிராண்டுகளின் முட்டைகளில் நைட்ரோஃபுரான் என்ற புற்றுநோய் உண்டாக்கும் கூறு இருப்பதாக வைரலான தகவலை மக்களை பீதியடைய செய்திருக்கும் நிலையில், மக்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்றும், இதுதொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தினேஷ் குண்டுராவ், ‘முதலில் சோதனைகளை நடத்தியது யார்? அவை அறிவியல்பூர்வமாக நடத்தப்பட்டனவா என்பது பற்றிய பின்னணியை நாம் உறுதிப்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து ஆணையரிடம் விவரங்களை சேகரிக்குமாறு அறிவுறுத்துவேன். முட்டையில் புற்றுநோய்க்கான கூறுகள் இருப்பதாக பரவிய தகவலில் உண்மை இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இப்போதைக்கு மக்கள் எந்தக் கவலையும் படுவதற்கான அவசியமில்லை’ என்றார்.
