×

நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத் ஒரே நாளில் 2.59 கோடி வழக்குகள் சமரசம்: ரூ.7,747 கோடிக்கு மேல் இழப்பீடு தீர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான 4வது தேசிய லோக் அதாலத்தில் 2.59 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்திய நீதித்துறையில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், மக்களுக்கு விரைவாகவும், குறைந்த செலவிலும் நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் லோக் அதாலத்துகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வழங்கப்படும் தீர்ப்புகளே இறுதியானவை என்றும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் நடைமுறை உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 26 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில், உயர் நீதிமன்றங்கள் முதல் மாவட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நுகர்வோர் மன்றங்கள் வரை நேற்று தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. இதில் 2.35 கோடிக்கும் அதிகமான வழக்குத் தொடருவதற்கு முந்தைய புகார்கள் மற்றும் நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 41.77 லட்சம் வழக்குகள் என மொத்தம் 2.59 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் (நல்சா) செயல் தலைவர் நீதிபதி விக்ரம் நாத் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த மெகா முகாம் நடைபெற்றது.
இது குறித்து ‘நல்சா’ வெளியிட்ட அறிக்கையில், ‘பரஸ்பர ஒப்புதல் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் முறையைப் பயன்படுத்தியதன் மூலம், இந்திய நீதித்துறையின் பணிச்சுமையைக் குறைப்பதில் இந்த லோக் அதாலத் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் நடைபெற்ற சமரசத் தீர்வுகளின் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.7,747.47 கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : New Delhi ,4th National Lok Session ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...