×

நாட்டையே உலுக்கிய நிதாரி கொலை வழக்கில் சுரேந்திர கோலி விடுதலை

புதுடெல்லி: நாட்டையே உலுக்கிய நிதாரி கொலை வழக்கில் இருந்து சுரேந்திர கோலியை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் நொய்டாவில் 31வது செக்டாரில் உள்ள பல ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் திடீரென மாயமாகினர். இந்த வரிசையில் பாயல் என்ற இளம்பெண் காணாமல் போக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது 31வது செக்டாரில் உள்ள பங்களா ஒன்றின் காவலாளி சுரேந்தர் கோலி என்பவர் போலீசாரிடம் சிக்கினார்.

அவர் வேலைபார்த்து வந்த பங்களா வளாகத்திலும், அதன் அருகில் உள்ள கால்வாயிலும் அடுத்தடுத்து சடலங்கள் மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 26 மண்டை ஓடுகள் கிடைக்க, இந்த வழக்கு நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்டது. இந்த வழக்கில் பங்களாவின் உரிமையாளரும், தொழிலதிபருமான மொஹிந்தர் சிங் புந்தேர், சுரேந்தர் கோலி இருவரும் பெண்கள், குழந்தைகளை கொன்று, சடலத்துடன் தவறான உறவு கொண்டதாக கூறி மொஹிந்தர் சிங் புந்தேர் மீது 6 வழக்குகளும், கோலி மீது 13 வழக்குகளும் பதிவாகின.

2007ஆம் ஆண்டு ஜூலையில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டின் போது அலகாபாத் ஐகோர்ட் இருவரையும் விடுவித்தது. 12 வழக்குகளில் விடுதலை பெற்ற கோலி மீது ஒரேயொரு வழக்கு மட்டும் பாக்கி இருந்தது. மொஹிந்தர் அனைத்து வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட, சுரேந்தர் கோலி கடைசியாக இருந்த ஒருவழக்கிலும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், நீதிபதி விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கோலியை விடுதலை செய்ய உத்தரவிட்டது. நீதிபதிகள் கூறுகையில்,’ நிதாரியில் நடந்த குற்றங்கள் கொடூரமானவை. ஆதாரம் தோல்வியடையும் போது, ​​கொடூரமான குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கூட தண்டனையை ரத்து செய்வது மட்டுமே சட்டப்பூர்வமான நடவடிக்கை. அந்த அடிப்படையில் கோலி விடுதலை செய்யப்படுகிறார்’ என்றனர். இதையடுத்து சுரேந்தர் கோலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Tags : Surendra Koli ,New Delhi ,Supreme Court ,Sector 31 ,Noida, Uttar Pradesh ,Payal… ,
× RELATED ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு...