காரைக்குடி சாலை ஓரங்களில் இரவுநேர கடைகளால் பாதசாரிகள் பரிதவிப்பு

காரைக்குடி, ஜன.5: காரைக்குடி பகுதியில் உள்ள சாலைகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் செக்காலை ரோடு, 100 அடி ரோடு, கல்லூரி சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து இரவு நேர ஓட்டல்கள் மற்றும் சிறிய தள்ளுவண்டி கடைகள் அதிகளவில் போடப்பட்டுள்ளன. இக்கடைகளுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் நிறுத்தி விட்டு அதிலேயே அமர்ந்து சாப்பிடுகின்றனர். தவிர இக்கடைகளில் தூவப்படும் மிளகாய் மற்றும் மசாலா பொடிகள் டூவீலர்களின் செல்வோரின் கண்களில் விழுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. நகரின் உள்ளே சுற்றுலா வாகனம் மற்றும் வெளிபகுதிகளில் இருந்து நகரின் உள்ளே வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவு உள்ளது. போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் சாலையின் இருபுறமும் டூவிலர்,கார் மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விட்டு செல்கின்றனர். முதல், இரண்டாம் பீட், செக்காலை ரோடு, கண்ணன் பஜார், பழைய பஸ் ஸ்டாண்டு ரோடு ஆகிய பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து தரைக்கடைகள் அதிகளவில் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடக்க கூட இடமில்லாமல் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சாலையோர ஆக்கிரமிப்பால் பாதசாரிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிது, புதிதாக தரைக்கடைகள் போடப்பட்டுள்ளது. துவக்கத்திலேயே கட்டுப்படுத்தா விட்டால் பின்னர் நிரந்தர கடைகளாக மாற்றி விடுவார்கள் என்றனர்.

Related Stories: