- தவெகா
- நாகர்கோவில்
- சப்-இன்ஸ்பெக்டர்
- அசோக்
- தக்கலை போக்குவரத்து காவல்துறை
- குமாரி மாவட்டம்
- தக்கலை பழைய பேருந்து நிலைய சாலை
- அப்பாட்டுவிளை
நாகர்கோவில்: குமரி மாவட்டம் தக்கலை டிராபிக் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார், நேற்று முன் தினம் இரவு சுமார் 11.20 மணியளவில் தக்கலை பழைய பஸ் நிலைய சாலையில் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது, அந்த வழியாக அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்த அஸ்வின் (31) என்பவர் பைக்கில் வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அஸ்வின், குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ப்ரீத் அனலைசர் மூலம் சோதனையிலும் அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்து, அவருக்கு அபராதம் விதித்து ஆவணத்தை கொடுத்துள்ளனர்.
போதையில் இருந்த அஸ்வின், எஸ்.ஐ. அசோக் கொடுத்த ஆவணத்தை கிழித்து எறிந்ததுடன், அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி இடையூறு செய்தார். மேலும், எஸ்.ஐ. அசோக்கை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, நான் யார் தெரியுமா? எனக்கே கேஸ்சா என மிரட்டிவிட்டு தப்பி உள்ளார். இதுகுறித்து அசோக், தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அஸ்வின் மீது, பி.என்.எஸ். பிரிவு 126 (2), 132, 324 (2), 351 (2), போக்குவரத்து விதிமுறை மீறல் சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அஸ்வின், சிவில் இன்ஜினியர் ஆவார். தற்போது, த.வெ.க. கட்சியில் தக்கலை கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* பஸ் நிலையத்தில் தள்ளாடிய குடிமகள்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு நேற்று காலை சுமார் 8 மணியளவில், சுமார் 25 வயதான இளம்பெண் தனது தோழி ஒருவருடன் மது போதையில் வந்து இறங்கினார். பஸ் நிலைய நடைபாதை படிக்கட்டில் இறங்கிய போது திடீரென தள்ளாடிய நிலையில் வந்த இளம்பெண் தவறி கீழே விழுந்தார். வெள்ளை கலர் டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட்ஸ் மட்டும் அணிந்திருந்த இளம்பெண், தன்னை அழைத்து வந்த தோழியையும் கண்டபடி திட்டியவாறு உளறிக் கொண்ட இருந்தார். இளம்பெண் அணிந்திருந்த பேன்ட்ஸ், இடுப்பில் நிற்காமல் இறங்கிய நிலையில், அதையும் சரி செய்து கொண்டு கை தாங்கலாக தோழி மிகுந்த சிரமப்பட்டு அழைத்து வந்தார். பின்னர், வள்ளியூர் செல்ல வேண்டுமென்ற அந்த பெண் கூறவே, பஸ்சில் தோழியிடம் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். கன்னியாகுமரியில் ரிசார்ட் ஒன்றில் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்ணை நன்றாக மது குடிக்க வைத்துள்ளனர். போதையில் அவர் தோழியிடம் நீ ஏன்? பார்ட்டிக்கு வர வில்லை என கூறியதை வைத்து தான், இவர் பார்ட்டியில் மட்டையான தகவல் தெரிய வந்தது.
