திருமலை: ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு நேற்று அதிகாலை சென்ற ஆம்னி பஸ், பைக் மீது மோதியுள்ளது. இதில் பைக்கின் டேங்க் வெடித்து பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 19 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ் பெங்களூரு நோக்கி பயணிகளுடன் புறப்பட்டது. இதில் 2 டிரைவர்கள், கிளீனர் மற்றும் 43 பயணிகள் என 46 பேர் பயணம் செய்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், சின்னத்தேக்கூர் அருகே நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் முன்னாள் சென்றுகொண்டிருந்த பைக் திடீரென வலது பக்கம் திரும்பியது. அதனால் பின்னால் சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பைக் சொகுசு பஸ்சின் அடியில் சிக்கிக்ெகாண்டு 300 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. சிறிது நேரத்தில் பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. மேலும் பஸ்சுக்கும் தீ பரவியது. பஸ் விண்ணை முட்டும் வகையில் கொழுந்துவிட்டு எரிந்தது.
அதிகாலை தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் பஸ் விபத்தில் சிக்கியதை அறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே குதிக்க முயன்றனர். அதில் 27 பேர் படுகாயங்களுடன் தப்பினர். சிலர் தூக்கத்தில் இருந்து விழித்து வெளியே வர முயன்றபோது தீ கொழுந்துவிட்டு எரிந்ததாலும், கரும்புகை சூழ்ந்ததாலும் வெளியே வர முடியாமல் அலறினர். ஆனால் பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்து கரிக்கட்டையானது. இந்த கோர தீவிபத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் கருகி பரிதாபமாக இறந்தனர். இறந்தவர்களில் 5 பேர் பெண்கள்,2 பேர் குழந்தைகள்.
மேலும் பஸ்சுக்கு அடியில் பைக்குடன் சிக்கிய கர்னூலில் உள்ள பிரஜாநகரில் வசிக்கும் சிவசங்கர்(20) என்பவரும் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த தீக்காயமடைந்த 9 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* தமிழகத்தைச்சேர்ந்த 2 பேரும் உயிரிழப்பு
இந்த விபத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் 6 பேர், தெலங்கானாவை சேர்ந்தவர்கள் 6 பேர், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 2, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் 2 பேர் என தெரியவந்தது. மேலும் 2 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
* விதிகளை மீறி இயங்கிய சொகுசுபஸ்
பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி அதிக பஸ்களை இயக்க அரசு திட்டமிடுகிறது. அதனை பயன்படுத்தி பல தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது மட்டுமின்றி, தங்களிடம் உள்ள அனுமதி இல்லாத பஸ்களையும் இயக்கி வருகிறது. இதனை அதிகாரிகளும் சரியாக கவனிப்பதில்லை. இந்நிலையில் தீ விபத்துக்குள்ளான இந்த பஸ்சிலும் தகுதிச்சான்று கடந்த மார்ச் மாதம் முடிந்துள்ளது. இன்சூரன்ஸ் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிந்துள்ளது. சாலை வரியும் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் இறுதியிலும், புகை வெளியிடும் சுற்றுச்சூழல் தர சான்றிதழ் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் முடிந்துள்ளது. எனவே உரிய இன்சூரன்ஸ் இன்றியும், முறையான வரி கட்டாமலும், பர்மிட் இன்றியும் அனைத்து நிபந்தனைகளையும் மீறி இந்த பஸ் இயங்கியுள்ளது என தெரியவந்தது. எனவே, இதுபோன்ற விபத்துகளை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுததுள்ளனர்.
* இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி
பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் பஸ் விபத்தில் பலர் உயிரிழப்பு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 கருணைத் தொகையாக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில அரசு உயிரிழந்த ஆந்திராவை சேர்ந்த 6 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
* ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
ஆம்னி பஸ்சில் கருகி பலியானவர்களில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொல்லாரமேஷ்(35), அவரது மனைவி அனுஷா(30), மகள் மன்விதா(10), மகன் மனிஷ்(12) என ஒரே குடும்பத்தில் 4 பேரும் இறந்துள்ளனர். ரமேஷ் பெங்களூரில் பணிபுரிந்து வந்துள்ளார். தீபாவளிக்கு ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு பெங்களுரு திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
