வங்கக் கடலில் அக்.27ம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டல் : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

டெல்லி : வங்கக் கடலில் அக்.27ம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என்று பெயர் வைக்கப்பட உள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது அக்.26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் அக்.27ல் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு மோன்தா என்று பெயர் வைக்கப்பட உள்ள நிலையில், ஆந்திர பிரதேசத்தில் வரும் 27,28 ஆகிய இரண்டு நாட்கள் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: