திருக்கோவிலூர் அருகே திமுக எம்எல்ஏ தலைமையில் டாஸ்மாக் கடை முற்றுகை வாக்குவாதம் பரபரப்பு

திருக்கோவிலூர், டிச. 29:கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த தகடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை திருக்கோவிலூர் செல்லும் மெயின் ரோட்டிலும், பள்ளிக்கு செல்லும் வழியிலும் அமைந்துள்ளதால் மது அருந்த வரும் குடி

மகன்கள் சாலையை ஒட்டினாற்போல் அமர்ந்து மது அருந்துகின்றனர். அப்போது அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவிகள், பெண்களை கேலி செய்கின்றனர். இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வந்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசில் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள்  டாஸ்மாக் கடையை அகற்றகோரி மனு அளித்தனர். இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ பொதுமக்களுடன் நேற்று திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி ராஜி, தாசில்தார் சிவசங்கரன், டாஸ்மாக் மேலாளர் மற்றும் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும் வசந்தம் கார்த்திகேயனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்காக டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து அப்பகுதி பெண்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் டாஸ்மாக் கடை இயங்காது என எம்எல்ஏவிடம் உறுதி அளித்து கடையை மூடினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். ஒரே நாளில் டாஸ்மாக் கடையை மூடிய வசந்தம் கார்த்திகேயனுக்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>