×

தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் பெய்த கனமழையால் செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், அக்.14: தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து கோடைகாலத்திலும் பாலாற்றில் தொடர்ந்து நீரோட்டம் இருந்த நிலையில், 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் அதிகளவு மழைப்பொழிவு இல்லாததால் பாலாறு வறண்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. மேலும், ஆந்திர மாநில எல்லையான வாணியம்பாடி அருகே ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி பாலாற்றில் நீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இதனால், வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி வழியாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், பாலாற்றில் நீர் வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், கனமழை பெய்தால் பாலாற்றில் எப்போது வேண்டுமானாலும் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. ஆனால், இந்த ஆபத்தை சிறிதும் உணராத வகையில், தினமும் செவிலிமேடு பகுதியில் சேதமடைந்த தரைப்பாலம் பகுதியில் சிறுவர்களும், இளைஞர்களும் அதிகளவில் வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதுடன், ஓரிக்கை பகுதிகளில் ஏராளமான சிறுவர்களும், இளைஞர்களும் குளித்து விளையாடி வருகின்றனர்.

ஆற்றில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், தண்ணீருக்குள் குதித்து விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள் ஆற்றில் அடித்துச் செல்லக்கூடிய அபாயம் உள்ளது. இந்த, நீர்வரத்து அதிகரித்தால் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள் சிக்க வாய்ப்புள்ளது. எனவே, காஞ்சிபுரத்தை அடுத்த பெரும்பாக்கம், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பாலாற்று பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Tamil Nadu-Andhra Pradesh border ,Sewilimedu Palar ,Kanchipuram ,
× RELATED சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு