சிவகாசி நகராட்சி பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்: கோசாலைகளில் அடைக்க கோரிக்கை

சிவகாசி, டிச. 25: சிவகாசி நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளில் அடைக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால் இதனைக் கட்டுப்படுத்த போலீசார் சிரமப்படுகின்றனர். நகரில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளதால் பஜார் பகுதி, ரதவீதி போன்ற இடங்களில் தினமும் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

காலை, மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நகரின் முக்கிய சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இந்தநிலையில் நகர் பகுதியில் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். சிவகாசியில் சிவன் கோயில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாடுகளுக்கு உணவுகள், வாழைப்பழங்களை வழங்கி செல்கின்றனர்.

இது போன்ற நாட்களில் சிவன் கோயில் முன்பு 20க்கும் மேற்பட்ட பசுக்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிவகாசியில் மாடுகள் வளர்ப்போர் காலை மற்றும் மாலை நேரங்களில் பாலை கறந்து விட்டு மாடுகளை தெருக்களில் அலைய விட்டு விடுகின்றனர். இந்த மாடுகள் நகராட்சி காய்கறி மார்க்கெட், கோயில்கள், கடைவீதிகளில் உள்ள கழிவுகளை உண்ணுவதற்காக தினமும் வந்து விடுகின்றன.

அதன் பின் சாலைகளிலேயே படுத்து உறங்குகின்றன. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் அவற்றை கோசாலைகளில் அடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: