×

காஞ்சிபுரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல்

காஞ்சிபுரம், செப்.25: காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் 2வது அல்லது 3வது வெள்ளிக்கிழமை(அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு 2 பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(26ம்தேதி) நடைபெறுகிறது. இம்முகாமில், தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து, வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram ,Collector ,Kalaichelvi Mohan ,Kanchipuram District ,Tamil Nadu government ,Employment and Training Department ,
× RELATED ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட...