அதிமுகவினருக்கு மட்டும் ஆடு வழங்கும் டோக்கன்திண்டிவனம் அருகே கிராம மக்கள் மறியல்: அதிகாரியை முற்றுகை-பரபரப்பு

திண்டிவனம், டிச. 23: திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தில் நேற்று அரசால் வழங்கப்படும் ஆடு வழங்கும் திட்டத்தில் அதிமுகவினருக்கு மட்டுமே 50 டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேம்பூண்டி கிராமத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கப்படாமல் அதிமுகவில் உள்ளவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுவதாக அறிந்த வேம்பூண்டி கிராம மக்கள் நேற்று வேம்பூண்டி கூட்டு பாதை, திண்டிவனம் -கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி கணேசன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து ஏழை, எளிய மக்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர், விதவைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆடு வழங்க உறுதி அளித்தால் மட்டுமே மறியல் கைவிடப்படும் என தெரிவித்தனர்.

பின்னர் டிஎஸ்பி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வரவழைத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் திண்டிவனம்- கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: