சென்னை: பாதுகாப்பு சோதனைகள் மெதுவாக நடப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து நேற்று காலை சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, துபாய் செல்லும் சர்வதேச விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனைப் பணிகளை தாமதப்படுத்தியதால் பயணிகள் சோதனைகளை முடித்து, விமானத்தில் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சர்வதேச விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து புனே, ஐதராபாத், தூத்துக்குடி ஆகிய பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய உள்நாட்டு விமானங்கள் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. வட மாநிலங்களில் கடுமையான மழை பெய்து மோசமான வானிலை நிலவுவதால், அங்கிருந்து வரும் விமானங்கள் தாமதம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும், தாமதமாவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடு விமானங்கள் தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
