×

1500 மீட்டர் ஓட்டப் போட்டி: கென்யாவின் கிப்யெகோன் 4வது முறை சாம்பியன்; தாயான பின்பும் தொடரும் சாதனைகள்

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப், மகளிர் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கென்யாவை சேர்ந்த வீராங்கனை ஃபெய்த் கிப்யெகோன் (31), தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கென்யாவை சேர்ந்த கிப்யெகோன், கடந்த 2018ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் ஆவார். அதன் பின்பும் ஓய்வெடுக்காமல் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலக தடகள ஓட்டப் போட்டியில் நூலிழையில் வெற்றியை தவற விட்ட கிப்யெகோன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அதன் பின் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்த அவர், 2023ல் புடாபெஸ்டில் நடந்த ஓட்டப் போட்டியில் 3வது சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில், டோக்கியோவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப், 1500 மீட்டர் மகளிர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற கிப்யெகோன், 3 நிமிடம், 52.15 விநாடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். இது, அவர் பெறும் 4வது சாம்பியன் பட்டமாகும். கிப்யெகோன், 3 முறை ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : 1500m ,Kenya ,Kibyekon ,Tokyo ,Faith Kibyekon ,World Athletics Championships ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு