விழுப்புரம் ரவுடியை கொலை செய்தது ஏன்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம், டிச. 15: விழுப்புரம் ரவுடியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து கொலை செய்த வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். விழுப்புரம் அடுத்த கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் பிரபல ரவுடி தொப்பை விஜி (எ) விஜி (36) வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது விழுப்புரம் நகரம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. விஜியை கொலை செய்த சிலம்பரசன் (32) அவரது குடலை உருவி கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு கொலை செய்த இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார் சிலம்பரசனிடமிருந்து கத்தியை பிடுங்க முயற்சி செய்தனர். ஆனால் ஆக்ரோஷத்தில் இருந்த சிலம்பரசன் போலீசாரின் பேச்சை மதிக்காமல் மீண்டும் விஜியை கத்தியால் வெட்டிவிட்டு விழுப்புரத்தில் இனி தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள் என்று, சூரசம்ஹாரம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.சிலம்பரசன் அளித்த வாக்குமூலம் தொடர்பாக போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட விஜிக்கு சிலம்பரசன் உறவினர். சிலம்பரசன் மனைவியுடன் கடந்த 4 ஆண்டுகாலமாக விஜி கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் விஜி கீழ்பெரும்பாக்கம் பகுதியில் சிலம்பரசனை வழிமறித்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் நேரில் சென்று விஜியை கண்டித்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜி குடிபோதையில் சிலம்பரசன் வீட்டுக்கு வந்து போலீசில் புகார் செய்தது தொடர்பாக தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விஜி மறைத்து வைத்திருந்த கத்தியால் சிலம்பரசனின் வலது கையில்  குத்தினார். பின்னர் தற்காப்புக்காக கத்தியை பிடுங்கி சிலம்பரசன் விஜியை வெட்டினார். இதில் விஜி இறந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.இது தொடர்பாக சிலம்பரசனின் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: