திருப்பூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்: சென்னைக்கு விமானத்தில் பறந்த இதயம்

திருப்பூர்: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரையை சேர்ந்தவர் எலிசபெத். கணவர் இறந்து விட்டார். இவரது மூத்த மகன் இளங்கோவன் (17), 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர்கள், திருப்பூர் அருகே முதலிபாளையம் வெள்ளைக்கரடு பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 21ம் தேதி இரவு இளங்கோவன்நண்பருடன் டூவீலரில் விஜயாபுரத்தில் இருந்து சிட்கோ செல்லும் சாலையில் சென்றார்.

அப்போது, வட்டக்காட்டுப்புதூர் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில், இளங்கோவன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை அளித்தும் நினைவு திரும்பவில்லை. மருத்துவ குழுவினர் அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர். அதன்படி இதயம் சிறுநீரகம், கல்லீரல், கண் மற்றும் கணையம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் நேற்று அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.

இதில் இதயம் மற்றும் 1 சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காலை 10.50 மணிக்கு ஆம்புலன்சில் ஏற்றி, போலீஸ் பாதுகாப்புடன் 40 நிமிடத்தில் கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து 11.40 மணிக்கு சென்னை செல்லும் விமானத்தில் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல், 2 கண், ஒரு சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இளங்கோவனின் உடலுக்கு அரசு சார்பில், கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமையில் மருத்துவர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Related Stories: