உயர்கல்வி நிறுவனங்களில் விளையாட்டு போட்டிகள்: யுஜிசி உத்தரவு

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம் வருமாறு: புகழ்பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வரும் 29 முதல் 31ம் தேதி வரை தடகளம் மற்றும் உள்ளரங்கம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அந்த அமைச்சகம் வழங்கியுள்ளது.

இதை பின்பற்றி விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தி முடிக்க வேண்டும். கைப்பந்து, டென்னிஸ் பந்து கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப்பந்து, மேசைப்பந்து, சாக்குப்போட்டி, கயிறு தாண்டுதல், கோ-கோ போன்ற போட்டிகளை நடத்தலாம். மேலும், இது சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யுஜிசி வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: