சென்னை: வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட மற்றும் கருணை அடிப்படையில் 202 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேளாண்மை-உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1982 பேருக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 266 பேருக்குமாக மொத்தம் 2248 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 60 வேளாண்மை அலுவலர்கள் மற்றும் 109 உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், வேளாண்மை-உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர் மற்றும் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 33 வாரிசுதாரர்களுக்குமாக மொத்தம் 202 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
* பொதுப்பணித்துறையில் 165; நெடுஞ்சாலைத்துறையில் 45
சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவிப் பொறியாளர் (சிவில்) மற்றும் (மின்) ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 165 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
