தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 6 மணிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணி நிலவரப்படி 43,000 கனஅடியாக அதிகரித்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் சவாரிக்கும் தடை விதித்து, கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியை தாண்டியது. கே.ஆர்.எஸ். அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
