காளான்கள் போல அதிகரித்து வருகிறது மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்குவதில் புதிய விதிமுறைகள்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மனமகிழ் மன்றங்கள் காளான்கள் போல அதிகரித்து வருவதாக கூறியுள்ள ஐகோர்ட் கிளை, உரிமம் வழங்குவதில் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தனியார் மது கடைகளுக்கு மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்து மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை என்பது அந்த சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்க முடியும்.

ஆனால் எப்எல் 2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் சட்ட விரோதமாக உறுப்பினர் அல்லாதோருக்கும் மது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விதிகளை மீறி செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்களின் உரிமத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘விதிகளை மீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது’’ என்றனர். இதற்கு அரசு தரப்பில், ‘‘விளையாட்டுக்கள், புத்தகம் வாசிப்பது போன்ற பொழுதுபோக்கு விஷயங்கள் மனமகிழ் மன்றங்களில் நடத்தப்படுகின்றன. அப்போது மதுவை உட்கொள்வது தனிநபரின் விருப்பம் சார்ந்தது’’ என கூறப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனமகிழ் மன்றங்களில் மது விற்பனையானால், அது குறித்து விதிகளில் இருக்க வேண்டும். அதை பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் காளான்கள் போல அதிகரித்து வருகின்றன. இங்கு உறுப்பினர் அல்லாதோருக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் மனமகிழ் மன்றங்கள் அமைந்துள்ள இடத்தில் இருப்பவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இது அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவு விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல் துறையும், பதிவு துறையும் இணைந்து செயல்பட வேண்டும். உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

உறுப்பினர் அல்லாதவருக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். மனமகிழ் மன்றம் எனும் பெயரில் மது விற்பனை செய்யலாமா என்பது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. ஆகவே, பதிவுத்துறை தலைவர் மனமகிழ் மன்றங்கள், எப்எல் 2 உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் போது அதனை தெளிவாக சங்க விதிகளில் குறிப்பிட அறிவுறுத்த வேண்டும். அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளும் வகுக்கப்பட வேண்டும். விதிகள் தெளிவாக இல்லை எனில் மதுவிலக்கு துறை தரப்பில் எப்எல் 2 உரிமம் மனமகிழ் மன்றங்களுக்கு வழக்கப்படக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Related Stories: