விழுப்புரம்: சென்னையில் வசிக்கும் முரளிமாணிக்கம் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊரான ராமநாதபுரம் சென்றுவிட்டு நேற்று காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தார். நேற்று மாலை விழுப்புரம் புறவழிச்சாலை திருவாமத்தூர் பிரிவு சாலையில் சென்றபோது, முன்னால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரது கார் சென்றுள்ளார். அவர் லாரி மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டதால், முரளிமாணிக்கத்தின் கார் அந்த காரின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது. அதேபோல் அவருக்கு பின்னால் கடலூர் மாவட்டம் லப்ப குடியை சேர்ந்தவர் ஓட்டி வந்த காரும் மோதியது.
அடுத்தடுத்து 3 கார்களும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் முரளிமாணிக்கம் காரில் கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. அவசர அவசரமாக முரளிமாணிக்கம் குடும்பத்தினர் காரில் இருந்து அலறியடித்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். மற்ற 2 கார்களில் இருந்தவர்களும் வெளியே வந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து விழுப்புரம் தீயணைப்பு மீட்பு குழுவினர் வந்து காரில் பற்றிய தீயை அணைத்து, மற்ற 2 கார்களிலும் தீ பரவாமல் தடுத்தனர்.
