வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் உரிமையாளரின் மூக்கு துண்டானது: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை: பூந்தமல்லி அருகே வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் உரிமையாளரின் மூக்கு துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த காவல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (35), அப்பகுதியில் இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அங்கு, அதிகளவில் கட்டுமான பொருட்கள் இருப்பதால், மர்ம நபர்கள் கட்டுமான பொருட்களை திருடிச் செல்லாமல் இருப்பதற்காக, தான் வளர்க்கும் 4 நாய்களை புதிய கட்டிடத்தில் கட்டி வைத்து, அந்த நாய்களுக்கு உணவு வைத்து பராமரித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பராமரித்து வந்த நாய் ஒன்று கணேஷ் மீது பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கை, கால்களை கடித்து குதறிய நாய், முகத்தில் பாய்ந்து மூக்கை கடித்து துப்பியது.

இதில், அவரது மூக்கின் ஒரு பகுதி துண்டானது. இதில் பலத்த காயமடைந்த கணேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அப்பகுதியில் வெள்ளவேடு போலீசார் விசாரித்தபோது, வீட்டில் வளர்க்கும் நாய்களை அதன் உரிமையாளர்கள் வெளியே விடாமல் வீட்டின் அறையில் பூட்டி வைத்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, வீட்டில் வளர்க்கப்பட்டது தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய் என்று தெரிவித்தனர்.

Related Stories: