சென்னை: போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயண சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட ஏழு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணம் செய்து வருகின்றனர். பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளம், www.tnstc.in, மற்றும் TNSTC செயலி மூலம் பயணச் சீட்டுகளை (90 நாட்கள் முன்னரே) முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது, தினசரி சுமார் 19,000 பயணச் சீட்டுகள் பயணிகளால் முன்பதிவு செய்யப்படுகின்றன. பயணச்சீட்டு முன்பதிவை ஊக்குவிப்பதன் வழியாக பேருந்து நிலையங்களில் கடைசி நேர பயணிகள் கூட்ட அடர்வினை தவிர்க்க இயலும் என்பதால், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ஜனவரி 2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000ம், இதர 10 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2,000 வீதமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பயணிகளிடமிருந்து கிடைத்த வரவேற்பின் அடிப்படையில். உயர் மதிப்பு பரிசுகள் வழங்கும் சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு குலுக்கல்: பயணிகளின் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2024ம் ஆண்டு நவ.21ம் தேதி முதல் 2025ம் ஆண்டு ஜன.20ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உயர் மதிப்புள்ள பரிசுகள் “சிறப்பு குலுக்கல்” மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு. முதல் பரிசாக இரு சக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக, நவீன எல்.இ.டி தொலைக்காட்சி பெட்டியும் போக்குவரத்து துறை அமைச்சர் மூலமாக வழங்கப்பட்டது. அதன்படி,“கோடை கொண்டாட்டம்” – இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்.1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை முன்பதிவு செய்து பயணிக்கும் அனைத்து பயணிகளில், 75 பயணிகளை “சிறப்பு குலுக்கல்” மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வருமாறு இலவச பயணங்கள் (1/9/2025 முதல் 31/8/2026 வரை) அனுமதிக்கப்டும்.
* முதல் பரிசு- 25 பேருக்கு ஒரு வருடத்தில் 20 முறை இலவச பயணங்கள்
* இரண்டாம் பரிசு- 25 பேருக்கு ஒரு வருடத்தில் 10 முறை இலவச பயணங்கள்
* மூன்றாம் பரிசு- 25 பேருக்கு ஒரு வருடத்தில் 5 முறை இலவச பயணங்கள்.
