புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து விழாக்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டது தான் இந்த மொய் விருந்து விழாக்கள். அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அனவையில் கிராமங்களில் பரவி தற்போது இந்த பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் சார்ந்த விழாவாகவும் உள்ளது.
இந்தநிலையில் ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெறும் மொய் விருந்தில் கோடிகள் புரண்டு வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வீசிய கஜா புயல் மொய் விருந்து நடத்த கூடிய பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்தது. இதனால் மொய் விருந்து நடாத்துபர்கள் போதிய அளவு மொய் வராததால் விழா நடத்த முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் ஆனி மாதமே மொய் விருந்து விழா தொடங்கியது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக மொய் விருந்து தொடங்கினாலும் தற்போது அந்த விழா களையிழந்துள்ளது.
