ஆரணி, ஆக.14: ஆரணியில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை திருடிச்சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி பச்சையம்மாள்(65). இவருக்கு மூட்டுவலி காரணமாக ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்று முன்தினம் பஸ்சில் வந்தார். பின்னர், அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல, புதிய பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றார். அப்போது, காந்தி சாலையில் மூதாட்டி பச்சையம்மாளை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 2 பெண்கள், அவர்களாகவே பணம் இருந்த பர்சை கீழே போட்டு விட்டு, அதனை பிரித்து எடுத்துக் கொள்ளலாம் எனக்கூறி நாடகம் ஆடியுள்ளனர்.
பின்னர், மூதாட்டி பணம் இருந்த பர்சை எடுத்தபோது, அதனை கடைக்காரர் ஒருவர் கவனித்து விட்டதாக கூறியுள்ளனர். அவர் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த இரண்டரை சவரன் கழற்றி கொடுத்து விட்டு செல்லுமாறு கூறி வாங்கி கொண்டுள்ளனர். மூதாட்டி அந்த கடைக்காரரை சந்திக்க சென்று திரும்பியதும், அந்த பெண்கள் அவரிடம் செயினை கொடுத்து விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அந்த பெண்கள் கவரிங் நகையை கொடுத்து ஏமாற்றி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பச்சையம்மாள் ஆரணி டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை திருடிச்சென்ற 2 பெண்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
