யாங்கூன்:: ஆசிய கோப்பை தாய்லாந்தில் வரும் ஆண்டு ஆசிய நாடுகளுக்கு இடையலான யு20 பெண்கள் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஆக.6ம் தேதி தொடங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற தகுதிச் சுற்று ஆட்டங்கள் பூடான்(ஏ பிரிவு), வியட்நாம்(பி பிரிவு) தஜிகிஸ்தான்(சி பிரிவு), மியான்மர்(டி பிரிவு), சீனா(இ பிரிவு), மலேசியா(எப் பிரிவு), உஸ்பெகிஸ்தான்(ஜி பிரிவு), லாவோஸ்(எச் பிரிவு) ஆகிய நாடுகளில் நடந்தன.
தகுதிச் சுற்றில் டி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது. இந்த ஆட்டம் மியான்மரில் உள்ள யாங்கூன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூடவே இந்த டி பிரிவில் தான் விளையாடிய 3 ஆட்டங்களில் 2ல் வெற்றி, ஒன்றில் டிரா கண்ட இந்தியா புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து ஆசிய கோப்பைக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் பங்கேற்க இந்திய யு20 பெண்கள் அணி, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாடத் தகுதிப் பெற்றுள்ளது. அதனால் இந்திய அணி வீராங்கனைகளும், பயிற்சியாளர் ஜோகிம் அலெக்சாண்டர்சன்(சுவீடன்) தலைமையிலான பயிற்சி குழுவும் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர்.
