திருவண்ணாமலை, ஆக.11: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நினைக்க முக்தித் தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா மாநில பக்தர்கள் தினமும் பல்லாயிரக்கணக்கில் வருகின்றனர். அதனால், பவுர்ணமி நாட்களுக்கு இணையாக அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிகின்றனர். அதனால், திருவண்ணாமலை நகரம் தினமும் திருவிழாக்கோலமாக காணப்படுகிறது.
இந்நிலையில், ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் தொடர்ச்சியாக, வார இறுதி விடுமுறை நாட்கள் அமைந்ததால், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அலைமோதியது. அதன்படி, நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கும்போதே தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. பின்னர், படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பொது தரிசன வரிசையிலும், கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவித்தனர்.மேலும், கடந்த 2 நாட்களாக கிரிவல பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்திருந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். இடுக்குப் பிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இடுக்குப் பிள்ளையார் சன்னதி துவாரம் வழியாக நுழைந்து தரிசனம் செய்தனர்.மேலும், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களின் வருகையால், திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையத்தில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.அதேபோல், சன்னதி தெரு, மத்தலாங்குளம் தெரு, பெரியார் சிலை சந்திப்பு, பே கோபுர வீதி போன்ற பகுதிகளில் ஆட்டோக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டதால் கடும் நெரிசல் காணப்பட்டது.
