×

ஓடை கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண் பக்தர்கள்: தேடும் பணி தீவிரம்

கலசப்பாக்கம், ஆக.11: பர்வதமலை கோயிலுக்கு வந்த 2 பெண் பக்தர்கள் ஓடை கால்வாயை கடக்க முயன்றபோது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் உடனுறை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வடபழனி மனைவி தங்கத்தமிழ்(36), மனோகரன் மனைவி இந்திரா(58) உட்பட 15 பேர் நேற்று முன்தினம் வேனில் பர்வதமலை கோயிலுக்கு வந்தனர். பின்னர், மலை மீது ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்த அவர்கள் இரவு அங்கேயே தங்கினர். தொடர்ந்து, நேற்று மாலை 6 மணி அளவில் அனைவரும் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.அங்கு வீரபத்ர சுவாமி கோயில் மற்றும் பச்சையம்மன் கோயில் இடையே செய்யாற்றில் வெள்ளம் சேரும் ஓடை கால்வாய் அமைந்துள்ளது. ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அந்த ஓடை கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஓடையை கடந்து தான் அக்கரைக்கு செல்ல வேண்டும்.

எனவே, அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஓடை கால்வாயை கடந்து சென்றனர். அப்போது, வெள்ளத்தின் ஓட்டத்தில் நிலை தடுமாறிய தங்கத்தமிழ், இந்திரா ஆகிய இருவரும் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் சென்றவர்கள் அவர்களை மீட்க முயன்றும் முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உடனே இதுகுறித்து போளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தகவலறிந்த கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடும் பணிகளை துரிதப்படுத்தினார். தொடர்ந்து, அங்கு ஓடை கால்வாயை கடக்க முடியாமல் தவித்த மற்றவர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக அக்கறைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.இதற்கிடையில், இரவு ஆகி விட்டதால் அங்கு போதிய வெளிச்சம் இல்லாதபோதிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர். இதற்கிடையில் கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர், எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பக்தர்கள் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பர்வதமலை கோயிலுக்கு வந்த பெண்கள் ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Odai canal ,Kalasappakkam ,Parvathamalai ,
× RELATED தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள்...