×

ரூ.233 கோடி மதிப்பீட்டில் சென்னையில் இன்று முதல் மின்சார ஏசி பஸ் இயக்கம்: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னையில் முதல் முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையிலும், டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல், இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, உலக வங்கியின் உதவியுடன், மொத்த விலை ஒப்பந்தத்தில், 1,225 மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக, அசோக் லெலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்திடமிருந்து 625 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி ரூ.208 கோடியில் 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமானப் பணிகள், பராமரிப்புக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையையும் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் மேலும் 135 மின்சார பேருந்துகள் சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக சென்னையின் முதல் முறையாக குளிர்சாதன வசதி கொண்ட 55 மின்சார பேருந்துகளும், 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளும் பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து இயக்கப்படவுள்ளன. பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த தாழ்தள மின்சார பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன. தற்போது அதில் 55 ஏசி மின்சார பேருந்துகளும் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Tamil Nadu government ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...