எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை துவக்கம்நெல்லை மாவட்டத்தில்22,897 பேர் எழுதுகின்றனர்

நெல்லை, ஏப். 5: தமிழகம், புதுவையில் பிளஸ்2 பொதுத் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (6ம் தேதி) துவங்கி வருகிற 20ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் கல்வி மாவட்ட அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். தேர்வு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வை சிறப்பாகவும் புகார்களுக்கு இடமின்றியும் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர், நிற்கும் படை, பறக்கும்படை, முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர். இதில் 11 ஆயிரத்து 895 பேர் மாணவிகள். இவர்களுக்காக 91 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நெல்லை கல்வி மாவட்ட அளவில் 36 மையங்களும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 18 மையங்களும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5 தனித்தேர்வர் மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாளை. மத்திய சிறையில் தேர்வு எழுதும் 12 கைதிகளுக்கு சிறை வளாகத்தில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வு எழுதாதவர்களுக்கு கடந்த 31ம் தேதி வரை சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன் பலனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் வராத பல மாணவர்கள் கூடுதலாக நீட்டிப்பு செய்த நாளில் வந்து செய்முறைத் தேர்வு எழுதிச் சென்றுள்ளனர்.

The post எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை துவக்கம்

நெல்லை மாவட்டத்தில்

22,897 பேர் எழுதுகின்றனர்
appeared first on Dinakaran.

Related Stories: